இறக்கும் வரையில் உங்களுடன் நிற்பேன் – வாகரையில் பிள்ளையான் தெரிவிப்பு!

0

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனது பலத்தினை உறுதிப்படுத்திக்கொண்டு என்னையும் எனது கட்சியையும் அழித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ள சில தலைவர்களுக்கு பாடம் புகட்டுவேன் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணை தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் வாகரை பகுதிக்கு விஜயம் செய்த அவர், அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நிறைவுபெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற சந்திரகாந்தன் சிறையிலிருந்து விடுதலையானதும் முதன்முறையாக வாகரைக்கு சென்ற நிலையில் அங்கு மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

 அதனை தொடர்ந்து வாகரையின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த அவர், அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

குறிப்பாக வாகரை பகுதியில் புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்திசெய்தல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வியில் பின்தங்கிய இப்பகுதியின் கல்வி நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் திரவியம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினர் எந்த அந்தஸ்தை வழங்கியவர்கள் இந்த மக்கள்தான். நான் மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையிலும் வாக்களித்து மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பத்தினை வழங்கிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மக்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கின்றார்கள். சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட கல்வி நிலையினை ஆராய்ந்தபோது கல்குடா வலயம் மிக மோசமான பின்னடைவு நிலையில் இருக்கின்றது.

நூற்றுக்கணக்கான ஆசிரியர் தட்டுப்பாடுகள் உட்பட பலர் விடயங்கள் காணப்படுகின்றது. கல்வி அடிப்படையில் கட்டியமைக்கப்படாவிட்டால் அனைத்தும் பின்னடைந்துவிடும். நாங்கள் மிக விரைவில் கல்வியை அபிவிருத்திசெய்யவேண்டும்.

வாகரை பிரதேசத்தில் அதிகமான நிலம் இருக்கின்றது. இதன்காரணமாக முதலீட்டாளர்கள், காணி ஆசையுடையவர்கள் பார்க்கும் சூழல் இருக்கின்றது.

குறிப்பாக இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்புக்கு என்று 2017ஆம் ஆண்டு 1100ஹெக்டர் நிலம் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றினையெல்லாம் பயன்படுத்தி முதலீடுசெய்து உழைக்கின்ற இளைஞர் கூட்டத்தினை உருவாக்குகின்ற பொறுப்பு இருக்கின்றது. அதற்கான பணிகளை அரசாங்கத்துடன் இணைந்து செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆகவே தொடர்ந்தும் நீங்கள் எங்களை பலப்படுத்தவேண்டும். நான் இப்போது எம்.பி., அமைச்சர் இல்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக இருக்கின்றேன். அதற்காக அமைச்சு தாருங்கள் என்று அலைந்து திரியமுடியாது. வருகின்றபோது வருவதை பெற்றுக்கொண்டு இருகின்றவற்றை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இன்று பிரதேச சபைகள் பல குழம்பிக்கிடக்கின்றது. கடந்த தேர்தல் குழப்பமான தேர்தலாக அமைந்தது. ஆட்சிகள் கூட எங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

எங்களது கட்சிகளை பலப்படுத்தும் விடயங்கள் எல்லாம் மிக விரைவாக செய்து, மாகாணசபை தேர்தலை எதிர்கொண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பலத்தினை உறுதிப்படுத்திக்கொண்டு என்னையும் எனது கட்சியையும் அழித்துவிடவேண்டும் என்று கங்கனம்கட்டிக்கொண்டுள்ள சில தலைவர்களுக்கு ஒரு பாடத்தினை புகட்டிவிடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

தொடர்ந்தும் உங்களுக்காக பணிசெய்வேன். இறக்கும் வரையில் உங்களுடன் நிற்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.