ஈஸ்டர் தாக்குதலுடன் ISIS தொடர்பா? – இலங்கையிலுள்ள ஒருவருக்கும் தொடர்பு? வெளியானது உண்மை

0

ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்புப்பட்டுள்ளதாகவும், அதற்கு இலங்கையிலுள்ள ஒருவரும் தொடர்புப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான தகவல் அரசாங்கம் அறிந்துள்ளதா என ஹரின் பெர்ணான்டோ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, அது தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இரகசிய தகவலை வெளியிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துகின்றமை தொடர்பில், தான் எதிர்வரும் திங்கட்கிழமை, சட்ட மாஅதிபரை பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 257 சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைத்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

அதேபோன்று, 86 பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் போது 8 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 8 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான வழக்குகள் தொடரப்பட்டு, அந்த ஆவணங்கள் சட்ட மாஅதிபரிடம் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் என்ற விதத்தில் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் தாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.