ஈஸ்டர் தாக்குதல் – செப்டம்பர் 2 முதல் 12 மனுக்கள் மீதான விசாரணை

0

ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் விவாதங்களை ஆரம்பிக்க உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்கள் இன்று புவனேக அளுவிஹாரே, எஸ். துரைரராஜா மற்றும் காமின அமரசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதற்கமைய இந்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விவாதங்களை நடத்துவதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.

எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பணங்களை அனைத்து தரப்பினரும் மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனுவின் சாட்சியாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று மன்றில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது சாட்சியாளருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் அனைத்தையும் சட்டத்தரணியிடம் கையளிக்குமாறு மனுதாரர்களுக்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல 21 ஆம் திகதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் விசேட பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.