ஊரடங்கு உத்தரவு குறித்து இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்!

0

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளைத் தவிர வேறு எங்கும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு முடிவு எதுவும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நாங்கள் முன் அறிவிப்பு எதனையும் கூறமுடியாது. ஒவ்வொரு நாளும் நாங்கள் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து வருகிறோம், நோய் தொற்று குறித்து ஜனாதிபதி நாளாந்தம் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

ஆனால் தேவை இருந்தால், நிச்சயமாக குறிப்பிட்ட பகுதிகளின் நிலைமைக்கு ஏற்ப ஒரு முடிவு எடுக்கப்படும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, மினுவான்கொடை ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய 1083 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கம்பஹா மாவட்டத்தின் பல இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.