கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை – ஜனாதிபதி!

0

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்து எதிர்கட்சிகளின் தலைவர்கள் அனுப்பியிருந்த கடிதத்திற்கான பதில் கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜீன் மாதம் 20 திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதியின் செயலாளரினால் முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர் தேர்தல் நடத்துவது தேவையில்லை என்றும், கொவிட் 19 வைரஸ் தொற்றுடன் மக்களின் சுகாதார, சமூக பாதுகாப்பு, நலன் பேணலுக்கு முழு அரச இயந்திரமும் அதிக பட்சம் கவனம் செலுத்தியுள்ள இச்சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், கொவிட் 19 நோய் நிவாரணத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதார, ஏனைய அரச சேவைகள், முப்படையினர், பொலிஸ் மற்றும் தனியார் துறையினரின் பெரும் தியாகசிந்தையுடனான பணிகளை மதிக்காமையுமாகும் என்று  ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அறியத்தர விரும்புகின்றேன்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது அதன் 5 வருட கால நிறைவில் அல்லது ஜனாதிபதியினால் கலைக்கப்படும் சந்தர்ப்பத்திலாகும் என்றும், அந்த வகையில் 2020 மார்ச் மாதம் 02ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கலைக்கப்பட்டமை நீங்கள் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள அனைத்து தரப்பினரினதும் ஏற்புடனும் மேற்படி நாடாளுமன்ற கலைப்பு பற்றிய அறிவித்தலின் செல்லுபடியாகும் தன்மை உறுதியாவதாகவும் அறிவிக்குமாறு ஜனாதிபதி எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என்றும், 2020.03.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவித்தலின் படி 2020.04.25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 2020.06.20ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்குமாறு எனக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பின் 70(7) படி செயற்படுவதற்கான தேவை எழவில்லை என்றும் ஜனாதிபதி உங்களுக்கு அறிவிக்குமாறு எனக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.