கொரோனா தொற்றுலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் விஷேட செயலணி

0

மட்டக்களப்பு மாவட்ட பொது மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பிலான விழிப்புணர்வு நடடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும், பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை ஒழுங்கு செய்யும் வகையிலும் விஷேட செயலணி ஒன்றினை உருவாக்கும் கலந்துரையாடலானது நேற்று(16.03.2020) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையில் பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்நோய்த் தொற்று தொடர்பில் பொது மக்களுக்கு இருக்கும் அச்ச உணர்வுகளைப் போக்கி, அவர்களுக்கு சுகாதார ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குதல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இச்செயற்பாடுகளை துரிதப்படுத்த ஓர் விஷேட செயலணி ஒன்றினை உருவாக்குவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருகைதரும் பொதுமக்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதோடு, மாவட்டத்திற்குள் வதியும் பொதுமக்களை நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பதற்குரிய விழிப்புனர்வுச் செயற்பாடுகளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மட்டக்களப்பு மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையுடன் மேற்கொள்ளல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் மாநகர நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் சேவை நாடிச் செல்லும் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்களின் திணைக்களத் தலைவர்களின் உதவியுடன் மேற்கொள்வதற்கும், தற்போது நிலவும் அத்தியவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதோடு இதற்காக உடனயாக ஓர் செயலணி ஒன்றினை உருவாக்கி அவர்களின் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இக்கலந்துரையாடலில் முடிவுகள் எட்டப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.கிரிசுதன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்தியர் சுந்தரேசன், குழந்தை நல வைத்திய நிபுணர் விஸ்ணு சிவபாதம், மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் செயலாளர் வைத்தியர் மயுரேஸ் மாநகரசபையின் சுகாதார நிலையியற் குழு தலைவர் சிவம் பாக்கியநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.