இளம் அரசியல்வாதியான சாணக்கியன் (sanakiyan) முஸ்லிம் சமூகத்திற்காகவும் குரல் கொடுப்பது தமிழ் முஸ்லிம் உறவில் திருப்பத்தை ஏற்படுத்தும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று (5) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது, ‘தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எடுத்துவரும் முயற்சிகளையும் அவரது நல்ல சிந்தனைகளையும் தான் வெகுவாகப் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர் முஸ்லிம் சமூகத்திற்காகவும் குரல் கொடுப்பதால் குறுகிய மனமுள்ள சிலர் அவரது போக்கை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றார்கள் அது வருத்தமளிக்கின்றது.
அவரைப் போன்றே மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்தும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.
ஈஸ்ரர் தாக்குல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
பாரிய அபாண்டத்தைச் சுமத்தினார்கள். முஸ்லிம் சமூகத்தின் மீது அபகீர்த்தியும் அவநம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது.
ஆனால் இப்பொழுது தாங்கள் கொண்டிருந்த அந்த நிலைப்பாட்டை சிங்கள மக்கள் மாற்றிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தை அனுதாபத்தோடு நோக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
நடந்த தவறான அபிப்பிராயத்துக்காக அவர்கள் வருந்துகிறார்கள். அந்தத் தாக்குதலில் முஸ்லிம் சமூகம் சம்பந்தப்படவில்லை என்பதையும் இது அரசியலை அடைவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதையும் சிங்கள மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
அதேவேளை கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டி வளர்க்காமல் தவறு விட்டிருக்கின்றார்கள்.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இப்போது அரசியலுக்குள் நுளைந்துள்ள புதிய அரசியல்வாதிகள் புதிய போக்கிலே சிந்தித்து சந்தேகங்களை நீக்க வேண்டும்.
மக்களை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும். தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலுப்பெறச் செய்ய வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இந் நிகழ்வில் வீட்டுத்தோட்ட விவசாயிகளுக்கு இரண்டரை இலட்ச ரூபாய் நகர சபை நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான வீட்டுத் தோட்ட விவசாயிகள் 35 பேருக்கு சேதன வளமாக்கித் தயாரிப்புத் தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.