சில பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு- விபரங்கள் உள்ளே

0

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்களாக பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதற்கமைய லாப் எரிவாயு நிறுவனம் அதன் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 4 ஆயிரத்து 199 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரத்து 680 ரூபாவாகவும், 2 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று எரிவாயுவின் விலைகளையும் அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரம் ரூபாய் நஷ்டத்திலேயே விற்கப்படுவதாகவும், டொலர் பெறுமதி அதிகரித்துள்ளமையால் தொடர்ந்தும் நஷ்டத்தில் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என்றும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டால் லாஃப் நிறுவனத்திற்கு சமாந்தரமாக லிட்ரோ விலையும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரையறுக்கப்பட்டளவில் கொழும்பில் லிட்ரோ சிலிண்டரை விநியோகிக்கும் சில விநியோகத்தர்கள் 12.5 கிலோ கிராம் சிலிண்டரை 3000 – 3500 ரூபாவிற்கும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரை 800 ரூபாவிற்கும் விற்பனை செய்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 2 ஆயிரத்து 675 ரூபா என்றும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 506 ரூபா என்றும் லிட்ரோ நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இதேவேளை, பால்மா விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மாவின் புதிய விலை 790 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 600 ரூபாவால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா ஆயிரத்து 945 ரூபா என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பால் தேநீரின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 100 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பால்மா விலை அதிகரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது.

விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் ஒரு தேநீருக்கு மூன்று கரண்டி பால்மா வரை பயன்படுத்துமாறு உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பால் தேநீர் விருந்தகங்களில் உரிய தரத்தில் தயாரிக்கப்படவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேபோன்று பெல்வத்த பால் மா நிறுவனம் 400 கிராம் பால் மா பக்கெட்டொன்றின் விலையை 105 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில், 400 கிராம் பெல்வத்த பால் மா பக்கெட்டொன்றின் புதிய விலை 625 ரூபாவாகும்.

அதேபோன்று சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது.

சகல விதமான முகக்கவசங்களையும் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் டொலர் பற்றாக்குறை தாக்கம் செலுத்துகின்றது.

இந்தநிலையில் இன்று முதல் முகக்கவசங்களின் விலையை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

தொலைபேசி நிறுவனங்கள் இது தொடர்பில் அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்த நிலையில் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், உள்நாட்டு அழைப்புகளுக்கான கட்டணங்கள் அல்லது இணையத்தள பாவனைக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த மூன்று மாத காலத்துக்குள் பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய 25 வீதத்தால் பஸ் கட்டணம் உயரும் எனவும், ஆரம்பக்கட்டணமாக 25 அல்லது 30 ரூபா நிர்ணயிக்கப்படும் என தெரியவருகின்றது.

வருடாந்த பேருந்து கட்டண மீளாய்வின் அடிப்படையிலேயே இந்த கட்டண உயர்வு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து சில நாட்களுக்கு முன்னரே பேருந்து கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று உற்பத்தி பொருட்களுக்கான மூலப் பொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வெற்று போத்தல்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களினால், குடிநீர் போத்தலுக்கான விலையை அதிகரித்த இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒன்றரை லீட்டர் குடிநீர் போத்தலின் விலையை 120 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 5 லீட்டர் குடிநீர் போத்தலின் விலை 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டொலரின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் மில்கோ நிறுவனத்தின் எந்த உற்பத்திகளினதும் விலை அதிகரிக்கப்படமாட்டாது.

அத்துடன் பால் மா உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் ஆரம்பம் முதல் பால்மா விநியோகிக்கப்படும் என மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார்.

மில்கோ நிறுவனம் பால்மா உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் அதன் விலை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.