தமிழ் தேசியக் கட்சிகள்-சமல் ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்!

0

தமிழ் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கும் இடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

முல்லைத்தீவில் தமிழர்களின் பூர்வீகக் காணிகளுக்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பான இந்தச் சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி வளாகத்திற்குள் இடம்பெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் அரச தரப்பில் எஸ்.வியாழேந்திரன், சுரேன் ராகவன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவில் செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையான தமிழ் மக்களின் எட்டு பூர்வீகக் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளை கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தின் ஆளுகையிலிருந்து மகாவலி அதிகார சபையிடம் ஒப்படைக்க இரண்டு வாரங்களின் முன்பு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பான தீர்வு குறித்தும் மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஏற்கனவே தமிழர் மரபுரிமைப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகள், மத்த தலைவர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.