தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன – மஹிந்த!

0

சஜித் பிரேமதாஸ நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2005ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டில் முப்பது வருடங்கள் காணப்பட்ட சிவில் யுத்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம்.

அதன் பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாட்டின் அனைத்து மாகாணத்திற்கும் ஒரே முறையில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினோம்.

அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாடசாலைகள் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் ஒரே சம அளவிலான அபிவிருத்திகளை நாடு முழுவதும் மேற்கொண்டோம்.

2015ஆம் ஆண்டின் பின்னர் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் அந்த அபிவிருத்திகளை பின்நோக்கி கொண்டு சென்றது. கண்டிக்கு வரும் அதிவேக நெடுஞ்சாலையும் எங்கள் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் கண்டியை மறந்துவிட்டது.

எங்கள் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

கடந்த அரசாங்கம் வேலை செய்வதனை நிறுத்தி விட்டு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அனைவரையும் பழிவாங்கினார்கள். ஆணைக்குழுக்களை அமைத்தார்கள்.

குற்றச்சாட்டுகள் இன்றி எங்கள் பிள்ளைகளை சிறையில் அடைத்தார்கள். எங்கள் அமைச்சர்கள், உறுப்பினர்கள், உதவிய வர்த்தகர்கள் என அனைவரையும் நிதி குற்ற விசாரணை பிரிவு என விசேட விசாரணை பிரிவை அமைத்து சிறையில் அடைத்தார்கள்.

அதற்கு பிரதமரால் மாத்திரமே முறைப்பாடு செய்ய முடியும். அந்த முறையில் சட்டத்தை உடைத்தார்கள். சட்டத்தை உடைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன் பின்னர் அந்த அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த மோதலினால் ஜனாதிபதி என்னை அழைத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறினார். நான் அதனை ஏற்றேன்.

அந்த காலப்பகுதியில் சிறிய காலப்பகுதி ஒன்றுக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என்பது எனக்கு தெரியும். அன்று நாங்கள் எதிர்கட்சியில் இருந்த போது எங்கள் குழுவில் ஐம்பத்து இரண்டு பேர் இருந்த போதிலும் எங்களுக்கு எதிர்கட்சி தலைமைத்துவம் வழங்கப்படவில்லை.

16 ஆசனங்கள் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. எதிர்கட்சியின் பிரதான கொறடா பதவி மக்கள் விடுதலை முன்னணிக்கும் வழங்கப்பட்டது. அது தான் அன்று நாடாளுமன்றம் செயற்பட்ட முறையாகும்.

அந்த விடயங்களை மேற்கொள்வதற்கு சபாநாயகர் புதிய சட்டத்திட்டங்களை கொண்டு வந்தார். இறுதியாக பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டு மீண்டும் எதிர்கட்சிக்கு செல்லும் போது எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்ற முடிந்தது.

அதன் பின்னரே புதிய கட்சி ஒன்றில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு அந்த தேர்தலில் வெற்றி பெற்றோம். எங்கள் கட்சிக்கு மூன்றாயிரம் கணக்கிலான உறுப்பினர்கள் உள்ளனர்.

பிரதேச சபை தேர்தலில் 71% ஆசனங்களை எங்களால் வெற்றியீட்ட முடிந்தது. ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் தாமரை மொட்டியில் போட்டியிட்டு கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி இரண்டு கட்சிகளில் இருக்கும் போது நாட்டிற்கு சேவைகள் ஒன்றும் நிறைவேற்றப்படாதென்பதனை நாங்கள் பார்த்தோம்.

அந்த தரப்பினர் சண்டையிடுவதனை மாத்திரமே செய்தார்கள். அதனால் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிக்கு நிச்சயமாக பிரதமர் பதவியும் நாடாளுமன்றமும் காணப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு ஒன்றில் அபிவிருத்திகள் ஏற்படாது.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் எங்கள் ஜனாதிபதியின் கொள்கை வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடியவர்களை நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை செய்வதற்காக இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள எங்கள் குழுவினர், கிராமங்கள் குறித்து, பிரதேசங்கள் குறித்து,  நாடு குறித்து மாத்திரமின்றி, சர்வதேச அரசியல் தொடர்பிலும் சிறந்த விழிப்புணர்வு கொண்டவர்களாகும்.

ஐக்கிய தேசிய கட்சி இன்று இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. பண்டாரநாயக்கவும், டீ.ஏ.ராஜபக்ஷவும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பினார்கள்.

அவர்களை தொடர்ந்து சந்திரிக்கா போன்று நாங்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முன்னோக்கி கொண்டு வந்தோம். பின்னர் எங்களை கட்சியில் இருந்து விலக்கியமையினால் எங்களுக்கு வேறு கட்சியை உருவாக்க நேரிட்டது. நாங்கள் மொட்டினை உருவாக்கி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

பெண்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் அவசியமாகும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு விசேட கடன் முறையை அமைப்பது அவசியமாகும். இன்று கடன் பெற சென்றால் வங்கிகளில் வழங்கும் விண்ணப்பங்களை பார்க்கும் போதே பயம் ஏற்படுகின்றது.

வங்கிகளில் கடன் வழங்கும் முறை மாற்றமடைய வேண்டும். அதனை நாங்கள் தினமும் கூறுகின்றோம்.  வங்கிகளில் கடன் பெற்று ஏதாவது தொழிற்சாலையை ஆரம்பிக்க கூடிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். அதனால் வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆலோசனை கிடைக்க வேண்டும்.

இலகு முறை ஒன்றை பின்பற்ற வேண்டும். பெண்களுக்காக விசேட வேலைதிட்டம் ஒன்றையும் கடன் பணம் வழங்கி சுய தொழில் தொழிற்சாலை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்த விடயத்திற்கமைய அவர்களின் வாழ்க்கையை வெற்றிகராக மேற்கொள்ள கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று தொழில் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்போம்.இதற்கு முன்னர் நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் அரச தொழிலில் ஏழு லட்சம் பேர் வரையிலானோரே இருந்தனர்.

நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது 15 லட்சம் பேர் வரையில் இருந்தனர். நாங்கள் ஒரே நேரத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கினோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தொழில் வழங்குவதாக கூறினார்.

கூறியதனை  போன்றே நாங்கள் தொழில் வழங்கினோர். எனினும் தேர்தல் சட்டத்திற்கமைய அவர்களுக்கு தற்காலிகமாக வீட்டில் இருக்க நேரிட்டுள்ளது. தொழிலை ஏற்றவர்களுக்கு சம்பளமும் கிடைக்கின்றது.

ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டமும் அதே போன்ற வேலைத்திட்டமாகும். முதல் முறையாக ஒரு பேனையில் ஒரு லட்சம் தொழில் வழங்கப்படுகின்றது.

நாங்கள் மூன்றில் இரண்டு அதிகாரம் கேட்கின்றோம். ஏன் மூன்றில் இரண்டு கேட்கின்றோம். அரசியலமைப்பை மாற்ற வேண்டும் நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு ஒன்று வேண்டும். நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்கும், நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கை தொகுப்புகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை தொகுப்புகளுக்கும் இடையில் ஒற்றுமை ஒன்று உள்ளது.

இலங்கை மிக பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட்ட சஜித் பிரேமதாஸ, நாட்டை பிளவுப்படுத்துவதற்கும் ஒரு போதும் தயங்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.