திருகோணமலை கரையிலிருந்து 190 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம்!

0

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலை கரையிலிருந்து 190 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்து வரும் சில மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இரவு  வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.