நாட்டில் எதிர்வரும் புதுவருடத்தின் பின்னர் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – எச்சரிக்கை

0

நாட்டில் எதிர்வரும் புதுவருடத்தின் பின்னர் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று இலங்கை பெற்றோலியத்தின் தனியார்துறை பௌசர் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தாம் மேற்கொண்ட விநியோக சேவைகளுக்கான போக்குவரத்து செலவுகள் இதுவரை செலுத்தப்படவில்லை என்று சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புதுவருடத்தை கொண்டாடுவதிலும் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடங்களில் தமது சேவைகளுக்குரிய கொடுப்பனவுகளை ஏப்ரல் 7 அல்லது 8ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ளமுடிந்தது. எனினும் நாளை புதுவருடம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை.

தமது சம்மேளனத்தின் பெரும்பாலான அங்கத்தவர்கள் வெளியிடங்களுக்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் கொடுப்பனவுகள் செலுத்தப்படவில்லை.

இதன் காரணமாக புதுவருடத்தின் பின்னர் குறைந்தளவான பௌசர் பணியாளர்களே கடமைகளுக்கு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே எரிபொருள் விநியோகத்தில் பாரிய பிரச்சனை ஏற்படலாம என்று பெற்றோலிய தனியார்த்துறை பௌசர் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே இதற்கான பொறுப்பை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரே ஏற்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்