பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மக்கள் எதிர்க்க வேண்டும் – சாணக்கியன்!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மட்டக்களப்பு மக்கள் எதிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு இளைஞர்களினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை பூங்கா பகுதியானது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் மரங்கள் வளர்க்கப்பட்டு இயற்கை அழகு பொருந்திய பகுதியாக மாற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு குறித்த பகுதியின் இயற்கை அழகு இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு மரம் நடப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வருகைதந்து குறித்த பகுதியை பார்வையிட்டனர்.

குறித்த பகுதியிலுள்ள இயற்கை தோனா பகுதியையும் மூடுவதற்கான நடவடிக்கையினை மாநகரசபை முன்னெடுத்துள்ளதாகவும் கழிவு குப்பைகளை கொட்டி அவற்றினை மூடுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவற்றினையும் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் இளைஞர்கள் இங்கு கோரிக்கை முன்வைத்தனர்.

தாமும் குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிக்கு வருகைதந்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளவை தொடர்பில் அவதானித்ததாக இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “மட்டக்களப்பு மாநகர சபை எல்லையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதரின் பெயர் வைக்கப்பட்டுள்ள பாலம் இருக்கும் இந்த இடத்தில் கடந்த வாரத்திற்குள் நடைபெற்றுள்ள சில தவறான வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக நான் இன்று இங்கு வந்துள்ளேன்.

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று காலை ஒன்று கூடி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த இடத்திலே சில மரங்களை நடுவதாக சொல்லியிருந்தார்கள்.

எனவே இந்த இரண்டு விடயங்களையும் பார்வையிடுவதற்காக நான் இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளேன். உண்மையிலேயே கடந்த வாரம் இந்த இடத்திலே உள்ள மரங்களை வெட்டுவதாக சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், முகநூல் ஊடாகவும் பார்க்கக்கூடியதாக உள்ளது. அதே நேரத்தில் நேற்றைய தினம் அல்லது நேற்று முந்தினம் இந்த இடத்தில் குப்பைகளை கொண்டுவந்து, இந்த அழகாக திருத்த வேண்டிய இந்த பூங்காவிற்குள் உள்ள குளத்தினை குப்பைகளை போட்டு இதை மூடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமல்லாமல் பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லுாரியின் அதிபராக கடமையாற்றிய பிரின்ஸ் காசிநாதரின் நினைவாக உள்ள இந்த பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் ஆரம்பித்துள்ளதாக எங்களுக்கு சந்தேகமுள்ளது.

மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லுாரியில் கல்வி கற்றுள்ள அனைத்து மாணவர்களும், இந்த விடயத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குறித்த பாடசாலையில் ஒரு வரலாற்று சாதனை படைத்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினரைாக இருந்த ஒருவர், மக்கள் நேசித்த ஒருவரின் நினைவாகவுள்ள இந்த பாலத்தினை அழிக்கின்ற செயற்பாட்டினை நாங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இந்த விடயங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட வேண்டிய விடயம் அல்ல. ஆனால் அரசியல் பின்புலத்தில் மக்களில் அக்கறை இன்றி இயங்கும் நபர்களினால் இவ்வாறான அராஜகங்களை வந்து பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.