பெரியகல்லாறில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேற்றாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போது பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்குள்ளானது தெரியவந்தது.

இந்த நிலையில் பெரியகல்லாறினை சேர்ந்த குறித்த இருவரினதும் குடும்ப உறுப்பினர்கள் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறாக காணப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த குடும்பத்தினருடன் உறவினை பேணியவர்கள் சுமார் 75 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று(புதன்கிழமை) 45பேருக்கு அன்டிஜன் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் தாயும் மகளும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

ஒருவர் விரிவுரையாளர் எனவும் அவரது மகள் மூலமாகவே இந்த தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட மாணவியுடன் தொடர்புபட்டவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

பெரியகல்லாறில் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதை தொடர்ந்து மக்கள் நடமாட்டமின்றி அனைத்து பகுதிகளும் வெறிச்சோடிக்காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் குறிப்பிட்டுள்ளார்.