‘வானொலியின் பிரதானி எனும் பொறுப்பு கத்தி மீது நடப்பதற்கு சமம்’

0

நமது தமிழ் ஊடகப் பரப்பில், அதிலும் முக்கியமாக வானொலித் துறையில் பல சிறந்த அடையாளங்கள் இருக்கின்றார்கள். தமது துறையில் கோலோச்சியிருக்கிறார்கள். அவர்களில், இன்று நாம் பேசப்போகும் ஆளுமை, பெண் தனித்துவங்களில் முக்கியமானவர். நிறைய அடையாளங்களையும், விருதுகளையும் சுவீகரித்தவர். அதிலும் இன்று மற்றுமொரு மகுடத்தையும் தன்னோடே வரித்துக்கொண்டவர்.

ஹோஷியா அனோஜன், இலங்கை தனியார் வானொலித்துறையின் ஆரம்பம் தொட்டு இன்றுவரைக்கும் வானலையில் நேயர்களோடு பயணிக்கும் ஒருவர். இதுவரை தனக்கிருக்கும் அடையாளங்களைக் கடந்து, இப்பொழுது ஒரு பெண்மணியாக அலைவரிசைப் பிரதானியாக தன் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

மகளீருக்கு சிறப்பளிக்கும் நாளில், இன்னும் வெற்றிகள் குவிக்க வாழ்த்திக்கொண்டு பேசத் தொடங்கினோம்.

99.5 & 99.7 எனும் அலைவரிசையில் உதயமாகும் புதிய வானொலிச் சேவையின் தலைமை அதிகாரியாகியிருக்கிறீர்கள். இந்த அனுபவம் எப்படியிருக்கிறது?

இது புதிய அனுபவம் தான். இதுவரைக்கும் அறிவிப்புத்துறையிலும், வானொலிகளிலும், நேயர்களோடும் நிறையவே உறவாடியாயிற்று. அந்த இறுக்கம், பிணைப்பு எப்போதும் ஒரு இனிய உற்சாகம்தான். ஆனாலும், ஒரு வானொலியின் பிரதானி எனும் பொறுப்பு என்பது கத்தி மீது நடப்பதற்கு சமமானதாகும். இது எனக்கு மட்டுமல்ல, இப்போதுள்ள எல்லா தலைமைகளுக்கு பொருந்தும்.

போட்டியான ஊடக உலகம். நிமிடத்துக்கு நிமிடம் எங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவையும், வேகமும் நிறையவே உள்ளது. நம் கையிலுள்ள பொறுப்பை திறம்பட நடத்தவும், வானொலியினை நிகழ்ச்சித்தரத்திலும், வர்த்த ரீதியிலும் உயர்த்திச் செல்ல, எங்களை தயார்ப்படுத்தி முன்கொண்டு செல்ல வேண்டும். அதை ஆரம்பித்திருக்கிறேன்.

பதவி இருக்கிறது என்பதற்காக கீழுள்ளவர்களை உழைக்க வைத்து, நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எல்லோரும் சேர்ந்து உழைக்கிறோம். இந்த உழைப்பு பல திருப்பங்களை எமது வானொலிக்கும் எமக்கும் கொடுக்குமென்று நம்புகிறேன்.

இப்பொழுதுள்ள தனியார் வானொலிகளிலிருந்து, எப்படியான மாற்றங்களை 99.5 & 99.7 தரப்போகிறது?

நாங்கள் வெறுமனே வர்த்தக நோக்கம் என்றில்லாமல், மக்களை இரசிக்க வைக்கும் நிகழ்ச்சிகளை படைக்கவே விரும்புகிறோம். அதையே எமது நிகழ்ச்சிகளாகவும் தயாரித்திருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில், நிகழ்ச்சிகளில் புதுமையும், படைக்கும் தன்மையில் மாற்றங்களும் கெண்டுவரப்பட வேண்டும். அதையே நான் அதிகமாக விரும்புகிறேன்.

வானொலியை தரமான நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் ஊடகமாகவும், வணிக ரீதியிலும் நிரந்தரமான இடத்தைக் கொண்டுள்ள இடமாகவும் மாற்றவும் வேண்டும். இன்றுள்ள காலத்தின் தேவைக்கேற்பவும், இரசிப்புத் தன்மைகளுக்கேற்பவும் எமது படைப்புக்கள் அமைகின்ற பட்சத்தில், நிச்சயமாக நேயர்களால் விரும்பி ரசிக்கப்படும். அந்த மாற்றத்தினை எங்களது அலைவரிசையில் நீங்கள் அவதானிக்கவும், ரசிக்கவும் முடியும்.

பல புதிய குரல்களையம், திறமைகளையும் உங்களது 99.5 & 99.7 அலைவரிசையில் எதிர்பார்க்கலாமா?

நிச்சயமாக!! இதுவரைக்கும் காலகாலமாக சில குரல்களைக் கேட்டு வந்த நேயர்களுக்கு, இன்னுமொருவித இனிமை கொடுக்கவே இங்கே இன்னும் பல புதிய திறமையான குரல்களை தெரிவு செய்து பயிற்றுவித்து வருகிறோம். அவர்களின் திறமையும் தேடலும் பல புதிய அம்சங்களை 99.5 & 99.7 இல் உங்களுக்காக கொடுக்குமென்று சொல்ல முடியும்.

கேட்ட குரல்களையே மீண்டும் மீண்டும் கேட்கச் செய்வதைக் குறைத்து, இன்றுள்ள வானொலிகளில் புதிய குரல்களை அதிகம் கொடுக்கப்போகும் வானொலி எமது என்பதும் பெருமை. ஏற்கனவே அறியப்பட்ட சில அறிவிப்பாளர்களோடு இந்த இளையவர் படையும் இனிமை சேர்க்கும்.

உங்களது 99.5 & 99.7 அலைவரிசை ஒரு தமிழ் நாமத்தில் உதயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், உங்களது அலைவரிசை நிகழ்ச்சிகளும் அதே தமிழில் உருவாக்கப்பட்டுள்ளனவா?

உண்மையில் இங்கு சில தெளிவுபடுத்தல்களை நான் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். அழகு தமிழில் ஒரு வானொலியின் பெயர் உருவாக்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அங்கு அதே போன்றே அழகு தமிழ் நிகழ்ச்சிகளின் பெயர்கள்தான் வைக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பது, இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரைக்கும் எந்தளவுக்குச் சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை.

ஏனெனில், இன்றைய காலகட்டமும், இளைய தலைமுறையின் ட்ரெண்டிங் பசியும் வேறாகி விட்டது. எமது பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரங்கள் எல்லாம் இந்த வெறும் பெயர்களில் தான் தங்கியிருக்கிறதா என்றால், இல்லை என்றே நான் குறிப்பிடுவேன். மேலும், இன்றைய காலவோட்டத்திற்கு ஏற்ப நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ள, தொகுத்தளித்தும் கொடுக்க வேண்டிய கடமை எங்களிடமுண்டு.

அதனால், தமிழாகவே எல்லாம் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது நல்லதல்ல. காலத்தின் வேகமும், இப்போதுள்ள புதுமைகளையும் ஒருங்காக்கித்தான் நிகழ்ச்சிகளின் தன்மையும் பெயரும் அமையும். ஆகவே, புதுமையும் இளமையும் சேர்ந்த உங்களைக் கவரும் நிகழ்ச்சிகளை எதிர்பாருங்கள்.

காலைநேர நிகழ்ச்சியில் அறியப்பட்ட தாங்கள், வானலைப் பிரதானி என்றாலும், இங்கும் காலை நிகழ்ச்சியில் வருவீர்களா?

கட்டாயம் வருவேன். சந்தேகம் தேவையில்லை. என்னதான் பொறுப்புகள் உயர்ந்தாலும், எனக்கும் நேயர்களுக்குமான அன்பை கட்டிப்போடுவதென்பது நான் நிகழ்ச்சியொன்றை படைக்கையிலேயே சாத்தியமாகிறது. ஆகையால், நேயர்களின் எதிர்பார்ப்புக்கு, இன்றைய தலைமுறையின் தேடலுக்கும் தீனிபோடும் ஒரு நிகழ்ச்சியோடு காலையில் சந்திப்பேன். காத்திருங்கள்.

ஒரு பக்கம் குடும்பத்தலைவி, இன்னொருபுறம் அலைவரிசைப் பிரதானி. இந்த இரண்டு பொறுப்புக்களையும் எப்படி இலாவகமாக கையாளுகிறீர்கள்?

பெண்களுக்கு இது புதிதில்லையே. குடும்பம், கணவர் பிள்ளையை பார்த்துக்கொள்வது ஒரு பக்கம் கவனமாக கையாளப்பட வேண்டியதுதான். அதிலும் எந்த இடர்பாடுகளை மூவருக்குள்ளும் வராதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மாவாய் மனைவியாய், எனது வகிபாவம் முக்கியமாகிறது.

இதே போல, சமநேரத்தில் வானொலியின் வெற்றிகளிலும் முன்னேற்றங்களிலும் எனது பங்களிப்பும் வழிநடத்தல் தேவையாகிறது. இரண்டிலும் சிக்கல்கள் வராதபடிக்கு பார்த்துக்கொள்ளவேண்டிய முக்கியமான பங்கு என்னுடையது. அதை செவ்வனே செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பவர் நான். என்னுடைய பொறுப்பு மற்றும் தேவைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமென்று உழைக்கிறேன். அதுதானே பரிபூரண நிம்மதியை நமக்கு கொடுக்கும்.

சரியான திட்டமிடல் மூலமாய், குடும்பம் மற்றும் வானொலி இரண்டையும் சரிவர சரியாய் நிர்வகிக்க என்னால் முடிகிறது. ஆக, வானொலிக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான உழைப்பைக் கொடுக்கிறோம். அதன் பிரதிபலன் நிகழ்ச்சித் தரங்களின் மூலமாக வெளிப்படும் என்று நம்புகிறேன்.

ஊடகங்கள் இப்பொழுதெல்லாம் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அப்படி வானொலித்துறையில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்?

இன்று இணையத்தில் எங்களது தேவைகளும், அவைகளுக்கான தீர்வுகளும் மூழ்கியாயிற்று. எதற்கெடுத்தாலும் இணையம் என்றான நிலைமையில், ஊடகங்களும், குறிப்பாக பொழுதுபோக்குவதற்கான அம்சங்களின் தேவைகளும் குறைந்து, இணையவெளியில் எங்களது நேரத்தை இழக்காத தொடங்கிவிட்டோம். உணவு தொடக்கம் போக்குவரத்து வரை இணையத்தை நம்பி வாழவேண்டியவர்களாக நம் வாழ்வியல் மாறி விட்டது. இதனால், அதிகம் கேள்விக்குறியாகவுள்ளவை இலத்திரனியல் ஊடகங்களே.

அன்று வானொலியைப் போட்டு, தொலைக்காட்சியை இயக்கி நிகழ்ச்சிகளின் இரசித்தும், பாடல்களை பார்த்தும் கேட்டும் மகிழ்ந்த சமூகம், இன்று youtube தளத்தில் குதித்து விட்டது. இது எவ்வளவு ஆரோக்கியம் அல்லது இலகு என்றெல்லாம் இங்கு பேசவில்லை. காலமாற்றமும் உலக இயக்கமும் இப்படித்தானென்றால் இப்படித்தான். ஆனாலும், சில இயல்புகளை மாற்றக்கூடாது என்பது என் கருத்து.

இன்று ஊடகத்துறைக்கு இணையம் ஒரு பெரிய சவால்தான். ஆனாலும், அதே இணையத்தினால், ஊடகங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதும் மறுக்க முடியாததுதான். சவாலையும் சமாளிப்போம் அவ்வளவுதான்.

நீங்கள் கடைப்பிடிப்பது, எல்லோருக்கும் வெற்றி கொடுக்கக் கூடியது?

சரியான திட்டமிடலும், தேடலும் உழைப்புமிருந்தால் எல்லோராலும் முன்னேற முடியும். பாலின வேறுபாட்டைக் கடந்து இருசாராரும் திறமையும் தேடலும் இருக்கின்ற பட்சத்தில் மிளிர முடியும். அதனால், நிறைய ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்களையும் உங்களுக்குள் உள்ள தன்னம்பிக்கையையும் சிறப்பாய் உணர்ந்து செயற்படுங்கள். எதிலும் தளம்பாதீர்கள். தீர்க்கமான முடிவுகளை எட்டப் பழகிக்கொள்ளுங்கள். இவைகளே உங்களது வெற்றிகரமான வாழ்வியலின் அடையாளங்கள்.