புரவி சூறாவளி :- தற்போது நிலைமை என்ன?

0

இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு கடுங்காற்று மற்றும் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புரவி புயல் இலங்கையினுள் புகுந்த பிறகு நாட்டினுள் கடுமையான பாதிப்புக்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த அனர்த்த நிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பாரியளவான சொத்து சேதங்கள் பதிவாகவில்லை எனவும், மரம் முறிந்து விழுதல், போக்குவரத்து தடைப்படுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூறாவளி நிலைமை காரணமாக நேற்றிரவு பூராகவும் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் கடும் காற்றுடன் மழை பெய்து வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், காற்று மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் வீசுகின்ற நிலையில் இந்த நிலைமை படிப்படியாக அதிகரித்து மணிக்கு 90 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் பலத்த காற்றுடனான கனமழை பெய்தது. இதன்காரணமாக 756 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் 941 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், மாவட்டத்தில் 15 வீடுகளுக்கு முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 153 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை 5 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இன்றைய தினமும் கடும் காற்றுடனான கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளமையினால் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று முல்லைத்தீவில் காற்றினால் பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை என பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும், கடும் மழை காரணமாக வீதிகளுக்கு மேலாக நீர் பாய்தோடுகின்றமை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இன்று காலை முதல் வவுனியாவில் மழை குறைவடைந்துள்ளதுடன், கடும் காற்று வீசி வருவதாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும், வவுனியா – கண்டி வீதியில் மரம்முறிந்து வீழ்ந்தமை காரணமாக மரத்தில் மோதுண்டு பாரஊர்தி சாரதி படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களர் தமது உறவினர்களை மீட்க கோரி நடத்தி வரும் போராட்டப்பந்தலுக்கு மேல் மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது.

வவுனியா கண்டி வீதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1385 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட கடும் காற்றினால் பந்தல் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் காணப்பட்ட மரத்தில் இருந்து பாரிய கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையினால் பந்தல் சேதமடைந்துள்ளது.

குறித்த பந்தலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான வயோதிப தாய்மார் சிலர் இரவில் தங்கி வருகின்ற போதிலும் அசாதாரண நிலை காரணமாக நேற்று இரவு குறித்த பந்தலுக்குள் எவரும் தங்கியிருக்காமையினால் உயிர்ச்சேதமோ காயமடையும் நிலையோ ஏற்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மட்டக்களப்பில் சீரான காலநிலை நிலவிவருவதாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், திருகோணமலையிலும் தற்போது சீரான காலநிலை நிலவிவருவதாக  பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் நேற்று இரவு வீசிய புரவி புயலின் தாக்கம் காரணமாக திருகோணமலையின் கடலோர பகுதிகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது.

திருகோணமலையின் வடகரைக் கடற்பகுதிகளில் பரவலாக கடல் நீர் உற்புகுந்ததன் காரணமாக பரவலான கடற்கரையோர கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

சூறாவளி அச்சம் காரணமாக மீனவப் படகுகள் அனைத்தும் வீதிகளிலும் பதுகாப்பான பகுதிகளிலும் வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பாதுகாப்பு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்தவர்களும் தற்போது தத்தம் வீடுகளுக்கு செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சூராவளியின் தாக்கம் காரணமாக திருகோணமலை பகுதியில் பாரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகாத போதிலும் ஒரு சில பகுதிகளில் சிறிய அளவிலான சேதங்களும் பரவலாக மரங்கள் சில முறிந்து விழுந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புயலின் தாக்கம் சீருக்கு வந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும், புயலுக்கு பின்னர் கிடைக்கும் மழை வீழ்ச்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

36 அடி கொண்ட இரணைமடு குளம் 20 அடியாக உயர்த்துள்ளது. கனகாம்பிகைகுளம் 9 அடியை எட்டியுள்ளதுடன் இன்று வான்பாய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், சீரற்ற வானிலை தொடர்வதால் பூநகரியில் உள்ள மீனவர்களை அவதானத்துடன் செயல்படுமாறு மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மூடப்படவுள்ளன.

புரவி சூறாவளியின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டே இவ்வாறு இன்றைய தினம் பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிழக்கு மற்றும் வடக்கு மாகாண பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகள் நாளை வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.