நாம் நினைப்பதை விட எமது எதிரி பலசாலியாக இருக்கலாம் – மட்டக்களப்பு வைத்தியர் எச்சரிக்கை!

0

நாம் நினைப்பதை விட எமது எதிரி பலசாலியாக இருக்கலாம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைநல மருத்துவ நிபுணர் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளது.

தனது முகப்புத்தகத்தின் ஊடாகவே அவர் இந்த விடயத்தினைக குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று இலங்கையிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

ஆனால் பொதுமக்களாகிய நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஏனென்றால் பொது இடங்களில் கூடும் மக்களின் செயற்பாடுகள் இதை காட்டி நிற்கின்றன.

அதைவிடவும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களினதும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர் உடன் நேரடியாக தொடர்புபட்டவர்களினதும் நடவடிக்கைகள் எம்மை சற்று சிந்திக்க வைத்துள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்து பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் பொலிஸாரின் உதவியுடன் இவர்களை கண்காணித்து வருகின்றனர்.

ஆனாலும் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அவர்களின் இந்த நடவடிக்கையின் செயல்திறன் குறையலாம் என்பது தவிர்க்க முடியாததாகும்.

இன்று இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீனாவை விட அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

1. இத்தாலியின் சனத்தொகையில் 27.8 சத வீதமானோர் 60 வயதை தாண்டியவர்கள் (சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9.5சத வீதம் மட்டுமே)

2. அதிகரித்துவரும் நோயாளர்களின் எண்ணிக்கையால் வைத்தியசாலைகளும் வைத்தியர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் அதிகரித்த வேலைப்பளுவுடன் உள்ளமை.

இலங்கையை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த நோய் தீவிர தன்மையை காட்டும் பொழுது வைத்தியசாலை கட்டமைப்பு செயலிழக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஏனென்றால் ஒரு வைத்திய விடுதியில் உள்ள உத்தியோகத்தருக்கு கொரோனா நோய் உறுதிப்படுத்தப்படும் பொழுது அவருடன் வேலை செய்த அனைவருமே குறைந்தது 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுவார்கள். அதாவது அந்த வைத்திய விடுதி செயலிழக்கின்றது.

இன்று இலங்கையில் இரண்டு வைத்தியர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பிழையான தகவல்களை வழங்கும் நோயாளர்களே.

இலங்கையின் சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12.3 சதவீதமாக இருந்தாலும், கொரோனா நோய் அபரிமிதமாக பரவும் பொழுது அதனால் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக கட்டமைப்பில் ஏற்படும் தாக்கங்கள் மிக நீண்ட காலத்திற்கு எம்மையும் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கலாம்.

அதைவிட இந்த வைரஸினால் எமது பெற்றோர்கள் இறக்கும்பொழுது அவர்களின் இறுதிச் சடங்குகளை நாம் தன்னந்தனியே செய்ய நேரிடலாம்.

சரி இதை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

அரசாங்கத்தினாலும் சுகாதார அமைசாலும் வழங்கப்படும் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதாவது எந்த காரணத்தைக் கொண்டும் சன நெரிசலை ஏற்படுத்தக்கூடாது.

எப்பொழுதுமே மக்களிடமிருந்து ஒரு மீட்டர் தூரத்தை பேணுதல் வேண்டும். வெறுமனவே முகக் கவசங்கள் அணிவதால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று நம்ப வேண்டாம்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வைத்தியர்களிடம் கொரோனா தொற்று பற்றிய உங்களது உண்மையை மறைக்க வேண்டாம். (அண்மையில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களும்).

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கண்டிப்பாக தங்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளவும். இதுதான் நீங்கள் இப்பொழுது உங்கள் தாய் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. இவை நடைபெறுகின்றதா என்பதை அவர்களின் உறவினர்களும் அயலவர்களும் சற்று கண்காணிப்பது சிறந்தது.

கொரோனா நோயாளர் உடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் செய்யவேண்டியவை

1. தங்களை தொடர்பு ஏற்படுத்திய நாளிலிருந்து 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதற்கு உங்கள் வீட்டில் நன்கு காற்றோட்டம் உள்ள ஒரு அறையை பயன்படுத்தலாம்.

2. வீட்டிலுள்ள மற்றவர்களுடன் எந்த ஒரு தொடர்பையும் வைக்க வேண்டாம். முடியும் என்றால் தனியான மலசல கூடத்தை பயன்படுத்தவும். அவ்வாறு இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்திய பின்னர் மலசல கூடத்தை நன்கு சுத்தப்படுத்தவும்.

3. குளித்தபின் தனியான துவாயை பயன்படுத்தவும்.

4. உங்களது ஆடைகளை பயன்படுத்திய பின்னர் நன்றாக கழுவி வெயிலில் காயவிடவும்.

உங்களுக்கு கொரோனா நோய்க்குரிய அறிகுறிகள் தோன்றும் பொழுது (வறண்ட இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல்) ஒரு முகக் கவசத்தை அணிந்துகொண்டு தனியான ஒரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அறிவித்த பின்னர் கொண்டு செல்லவும். வைத்தியசாலையில் உங்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று வைத்தியரை அணுகவும்.

மூடநம்பிக்கையில் மூழ்கி (பெருங்காயம் அணிவது) எமது எதிரியை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

நாம் இவ்வாறு செய்யவில்லை என்றால் கொரோனா தொற்றிலிருந்து எமது நாட்டைப் பாதுகாப்பது சற்று சிக்கலாகிவிடும்.

எம்மை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோருக்கு நாங்கள் செய்ய வேண்டியதை கற்பனை செய்து வைத்திருப்போம் அல்லவா? ஆனால் இந்த கொரோனா வைரஸ் எமது அந்த கடமையை இலகுவாக்கி உள்ளது என்றால் நம்புவீர்களா?

ஆம், நாம் எமது முதியோருக்கு இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் வீட்டில் ‘சும்மா’ இருப்பதுதான். ஒன்றிணைந்து கொறோனாவை எதிர்ப்போம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.