உலகில் மிக அபாயமிக்கவையாக கண்டறியப்பட்ட 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இலங்கையில் அடையாளம்!

0

உலகில் மிக அபாயமிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

இவை சமூகத்தில் பரவியுள்ளனவா என்பது குறித்து தொடர்ந்தும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மிக அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்கள் பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, பிரேஸில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ்கள் ஏனைய வைரஸ்களைவிட பரவும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் இதன்மூலம் ஏற்படும் பாதிப்புக்களும் மரணங்களும் அதிகரிப்பதோடு, தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதாலேயே இவை அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வைரஸ்கள் இலங்கைக்குள் பரவியுள்ளனவா என்பது தொடர்பாக சுகாதார தரப்பினர் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர்.

அவ்வாறு இவை இனங்காணப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, இந்தியா மற்றும் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸ்கள் மிகவும் வேகமாக பரவக் கூடியவையாகும்.

எனவே அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வேறு எந்த காரணிக்காகவும் வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்வதே இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.