சுனாமிப் பேரலை தாக்கி இன்றுடன் 16 வருடங்கள்

0

இலங்கையை சுனாமிப் பேரலை தாக்கி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கைகளின் பிரகாரம், இலங்கையின் 13 கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 10 ஆயிரத்து 436ற்கு மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்தன. இலங்கையில் நிகழ்ந்த மொத்த மரணங்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 322 என சர்வதேச சுனாமி தகவல் நிலையம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு அப்பாலுள்ள கடலில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலை எழுந்து இந்துமா சமுத்திரத்தின் 13 கரையோர நாடுகளைத் தாக்கியது.

இந்த இயற்கை அனர்த்தத்தில் மொத்தமாக 2 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வரை மரணித்தார்கள். இந்தோனேசியாவில் 67 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், இந்தியாவில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் மரணத்தைத் தழுவினார்கள்.

ஆழிப் பேரலை அனர்த்தத்தால் இந்துமா சமுத்திர கரையோர நாடுகளுக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் ஆயிரம் கோடி டொலரைத் தாண்டுகிறது. இலங்கையில் சுனாமியின் விளைவாக பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை மாவட்டங்களில் கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டன. சர்வதேச அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருந்தன.

சுனாமியை நினைவுகூருமுகமாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்திய தேசிய பாதுகாப்புத் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

தேசிய இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய பாதுகாப்புத் தினத்தன்று சர்வமத நிகழ்ச்சிகளை நடத்தி, சுனாமியில் பலியானவர்களை நினைவுகூறுவது வழக்கம்.

இம்முறை கொள்ளுபிட்டி மல்லிகா முதியோர் இல்லத்தில் தாய்மாருக்கு தானம் வழங்கப்படும்.

நாட்டில் நிலவும் கொவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக நிகழ்ச்சிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்களே பங்குபற்றுவார்கள் என நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.