தாய்மாருக்கான விடுமுறை குறைப்பிற்கு எதிர்ப்பு

0

அரச சேவையில் இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான புதிய பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுமுறையை பாதியாகக் குறைப்பதற்கான, இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

அரச சேவையில் உள்ள தாய்மார்கள் இதுவரை அனுபவித்த 12 வார மகப்பேறு விடுமுறையை, இந்த வருடம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆறு வாரங்கள் மாத்திரமே வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய அரசாங்கம், பெண்களுக்கான 84 நாட்கள் மகப்பேறு விடுமுறையை, 42 நாட்களாகக் குறைப்பது பிறக்காத குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என, ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“அந்தக் குழந்தை வாழ வேண்டுமென்றால், அந்தக் குழந்தைக்கு போசனை அவசியம். அந்தக் குழந்தைக்கு போசனையை வழங்க வேண்டுமென்றால், தாய் தன் குழந்தைக்கு உணவளிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும்.” என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் அடுத்தவர் குழந்தைகளை, தங்கள் குழந்தைகளைப் போலவே செயற்பட்ட ஆட்சியாளர்கள் இப்போது பிறக்காத குழந்தைகளின் மனித உரிமைகளையும் மீறியுள்ளதாக, ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

”பாலூட்ட இடமளியுங்கள்” என்ற தலைப்பில் கொழும்பில் நடத்திய கூட்டு ஊடக சந்திப்பில், தொழிற்சங்கத் தலைவர் சுரஞ்சய அமரசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் கலந்து கொண்ட ஊடக சந்திப்பைத் தொடர்ந்து, மகப்பேறு விடுமுறை குறைக்கப்படுவதை எதிர்த்து ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

தற்போதுள்ள 84 நாட்கள் மகப்பேறு விடுமுறை உட்பட பொதுச் சேவை உரிமைகளின் அடிப்படையில் தனியார் துறையில் காணப்படும், ஊழியர்களின் மகப்பேறு விடுமுறை முரண்பாடுகளுக்கு தீர்வுகாண முடியும் என ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பின் பதில் செயலாளர் சுரஞ்சய அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு தனியார் துறை நிர்வாகத்தினர் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளின் சாத்தியம் குறித்தும் சுரஞ்சய அமரசிங்க எச்சரித்தார்.

செப்டம்பர் 2ஆம் திகதி, பயிற்சி பட்டதாரிகளாக பொது சேவையில் சேர்க்கப்பட்ட பெரும்பான்மையான பட்டதாரிகளின் மகப்பேறு விடுமுறையை அரசாங்கம் பாதியாக குறைத்துள்ளதாக, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, ஒன்றிணைந்த அபிவிருத்தி ஊழியர் நிலையத்தின், செயலாளர் தம்மிக முனசிங்க சுட்டிக்காட்டினார்.

”இதற்கமைய, நியமனக் கடிதத்தின் 7ஆவது பிரிவு பிரசவத்திற்கு, குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு வார கால விடுமுறை வழங்கப்படும் என தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆறு வாரங்கள் எனப்படுவது 42 நாட்கள். இது சனி மற்றும் ஞாயிறு நாட்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான 42 நாட்கள் ஆகும்.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயிற்சி பட்டதாரிகளாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பொது சேவையில் சேர்ந்த பட்டதாரிகளின் நியமனக் கடிதத்தில், 84 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக, தொழிற்சங்கத் தலைவர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலைகளில், 2020 ஆட்சேர்ப்பின் போது பெண்களின் மகப்பேறு விடுமுறை எந்த அடிப்படையில் குறைக்கப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் மகப்பேறு விடுமுறையை குறைப்பதானது, பொது வேலைவாய்ப்புக்கான வழிகாட்டியாக அமைந்துள்ள, ஸ்தாபனக் குறியீட்டை மீறும் செயல் என தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.