பொலிஸ் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை பற்றி தெரியாதா – இரா.சாணக்கியன் கேள்வி

0

பொலிஸ் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை பற்றி தெரியாதா என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “ எனக்கு நீதிமன்றம் ஊடாக மேலும் ஒரு தடையுத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது. ஒரு மாதத்திற்குள் ஐந்து தடவைகள் எனக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தடையுத்தரவுக்கு மேலாக தன்னை வந்து சந்திக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எனக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். பொலிஸ் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை தெரியாதா என்பது கேள்வியாகவுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தியாகி திலிபனின் நினைவு தினங்களைச் செய்யக்கூடாது என்பதற்கான தடையுத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நினைவுகூரலைச் செய்யாமல் நாட்டின் ஜனநாயகத்திற்காக நாங்கள் உண்ணாவிரத அனுஷ்டிக்கத் தீர்மானித்ததற்கு அமைவாக மட்டக்களப்பு கல்லடியில் அவ்வாறான நிகழ்வினை ஏற்பாடு செய்தோம்.

அதில், எந்தவொரு தனிநபரையும் நினைவுகூரும் நிகழ்வாக இல்லாமல் இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும், தமிழர்களுக்கு சுதந்திரமான நிலை அமையவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனைசெய்து பூசையொன்றினை ஏற்பாடுசெய்தோம்.

ஆனால், அந்த நிகழ்வினையும் இடைநிறுத்துமாறு காத்தான்குடி பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டு எனக்கும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவனுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் பிரதேச செயலாளருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகரை வந்து சந்திக்குமாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் தியாகி திலீபனுக்கு நினைவுகூரலை செய்யவேண்டுமாகவிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் எங்களது ஆதரவாளர்களைக்கொண்டு நினைவுகூரலை செய்திருக்கமுடியும்.

ஆனால், நாங்கள் சட்டத்தினை மதிக்கும் ஒரு கட்சியென்ற ரீதியில் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. சிறுபிள்ளைத்தனமாக தடையுத்தரவுகளைப் பெற்று பொலிஸார் செயற்படுகின்றனர்.

ஒரு ஆலயத்தில் பூசை செய்வதை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி அதற்கான தடையுத்தரவு பெறப்படுகின்றது என்றால் இந்த நாட்டில் ஜனநாயகம் எந்தளவுக்கு உள்ளது என்பதை அனைவருக்கும் புரிந்துகொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தவர்கள் இன்று சிந்திக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.