மட்டக்களப்பில் மாபெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவந்த நிலையில் அந்த இடம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் சட்ட விரோத மதுபாவனையினைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு களப்புப் பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையம் ஒன்று கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் அசோக் குணவர்தன தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இதன்போது, 23 பரல்களில் கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4170 லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ள அழிக்கப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

மண்முனை தென் மேற்கு பிரதேசசெயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சனா கௌரியின் ஆலோசனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வழிகாட்டலில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இங்கிருந்து மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு கசிப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் நேற்று இரவு விவசாயிகளுக்கான பயண அனுமதிப்பத்திரத்தினை வைத்துக்கொண்டு கசிப்பு காய்ச்சுவதற்கான பொருட்களை கொண்டுசென்ற ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 25கிலோ கசிப்பு காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள் கலந்த சீனி மீட்கப்பட்டதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.